திங்கள், 27 ஜனவரி, 2014

சாதி எனும் நோய்


சாதி என்பது இந்து மதத்தை எவ்விதம் பாதித்தது என்பது கடந்த பல நூற்றாண்டுகளாக நாம் சிந்திக்காத ஒன்று. மத மாற்றம் நிகழ்ந்ததற்கு அந்நிய படையெடுப்புகள் ஒரு காரணமாக இருந்தாலும், இந்து மதத்தில் நடைமுறையில் இருக்கும் சாதிய பாகுபாடுகளே முக்கிய காரணம்.
உயர் சாதி இந்துக்கள், வேதாந்தம் பேசலாம் இந்தியா இந்துக்களுக்கு என்று. மற்ற மதம் சார்ந்தவர்களும் ஆரம்பத்தில் இந்துக்களே. தாழ்ந்த சாதி என்று உரிமைகளை நசுக்கி அவர்களை தாழ்த்தியே ஒரு கட்டத்தில் அவர்கள் வெளியேற நாம் காரணம் ஆகி விட்டோம். அதற்கான விலையை தான் இன்று கொடுத்து கொண்டிருக்கிறோம்.

குடும்பத்தில் பெற்றோர் தனது குழந்தைகளிடம் பாகுபாடு காட்டினால், ஒரு கட்டத்தில் பெற்றோரை வெறுத்து பிள்ளைகள் வெளியேறி விடுவதை போல தமிழினம் என்ற குடும்பத்தில் இருந்து இந்து மதம் என்ற பெற்றோர் காரணமாக, பாகுபாடு காட்டப்பட்ட பிள்ளைகள் வெளியேறினர். தமிழ் இனத்திற்கு இந்து மதம் அடிப்படையாக இருந்தது. நமது தேவாரம் திருவாசகம் எல்லாம் தமிழின அடையாளமாக இருந்தது, தற்பொழுது தமிழ் பேசும் மற்ற மதத்தவரால் அவை வெறுக்கப்படுகிறது.
சாதிகளே, தமிழ் இனம் மற்றும் இந்து மத அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஒரு இனத்தின் அழிவு அதனுள் பிரிவினை வரும் பொழுதே தொடங்குகிறது. இதை அறியாத மூடர்களே சாதி பிரிவினைகளை ஆதரிக்கின்றனர். இன்று கூட தாழ்ந்த சாதி மக்கள் உயர் பதவிகளில் இருப்பதும், அவர்களின் கீழ் உயர் சாதி மக்கள் பணிபுரிவதும் அவமானமாக கருதபடுகிறது. எனது பார்வையில், உயர் பதவியில் அமர்ந்த பிறகு, தாழ்த்தப்பட்டவர்கள், உயர் சாதி இந்துக்களை அவமானபடுத்துவது கூட சரியே என்பேன் நான். இத்துணை ஆண்டு காலம் அவர்களை அடிமைபடுத்தி, அவர்களின் அவலம் கண்டு மகிழ்ந்தவர்கள், அதற்கான விலையை கொடுக்கட்டுமே.. தாழ்ந்த வகுப்பை சேர்ந்த ஒருவர், உயர் சாதி சேர்ந்த ஒருவருக்கு குற்றம் புரிந்தால் கூட, அவரை தண்டிக்க கூடாது என்பேன்.
இத்துணை ஆண்டு காலம் அவர்களின் ரத்தத்தில் அடிமை படுத்த படுகிறோமே என்றிருந்த அந்த கோப தீயின் வெளிப்பாடு அது.
கவுண்டர், தேவர் இன்னும் பல சாதி பெயர்களை குறித்து தமிழ் திரைப்படங்கள் வருவதும், அதை கண்டு அச்சாதியை சேர்ந்தவர்கள் பூரித்து போவதும் வேட்க்ககேடானது. மனிதனை மனிதன் அடிமையாக நினைக்கும் வழக்கம், நமது மானம் என்றென்னும் இந்த அவலம் எப்பொழுது மாறும்?
வெளியில் என்ன சொல்லி திரிந்தாலும் நான் உட்பட அனைவருள்ளும் கலந்து நிற்கும் அந்த சாதி பேயை அழிக்கும் காலம் வருவது எப்பொழுது?
வேட்டையாடி திரிந்த மனிதன், விவசாயம் செய்ய ஆரம்பித்து ஒரு சமுதாய ஒழுங்கு ஏற்பட்ட உடன் அவர் அவர் தங்களுக்கு பிடித்த வசதியான தொழிலை செய்ய துவங்கினர். குழுக்களாக தொழில் நிமித்தம் கூடினர். இதில் இருந்து உருவானது அல்லவா சாதி!!
இதில் பிறப்பில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று வந்தது எப்படி?

மகாத்மா காந்தி கூட ஆரம்பத்தில் வருணாசிரம முறையை(குல தொழில் முறை) ஆதரித்தவர் தான். பின்னாளில் அம்பேத்கார் மற்றும் வள்ளலார் அவர்களால் மனம் மாறி, கலப்பு திருமணங்களையும் சாதி ஒழிப்பையும் வலியுறுத்தி அந்த காரணங்களுக்காகவே கொலையும் செய்யப்பட்டார்.

செய்யும் தொழில் குறித்து மனிதனை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரிக்க முடியும் என்றால், பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிபவர்கள் உயர் சாதி என்றும், சிறிய நிறுவனங்களில் பணி புரிபவர்கள் தாழ்ந்த சாதி என்றும் இன்னும் சில நூறு வருடங்களில் உருவானால், ஏற்று கொள்வீர்களா? சிந்தியுங்கள்.

தமிழர் திருநாளாம் தை பொங்கல் தினத்தன்று தமிழர் மனதில் ஊறி கிடக்கும் சாதி அழுக்கை அகற்றி இப்பொங்கலை சமத்துவ கதிரவன் உதிக்கும் பொங்கலாக கொண்டாடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக